பங்குனி பெருவிழாவில் கடைசி நிகழ்வாக கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது
பங்குனி பெருவிழாவில் கடைசி நிகழ்வாக கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது
சென்னை: பங்குனி பெருவிழாவில் கடைசி நிகழ்வாக கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு வெள்ளி ரிஷபவாகன பெருவிழா நடந்தது. 10ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 11ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 12ம் தேதி தேதி வெள்ளி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 13ம் தேதி சவுடல் விமானமும், 14ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 15ம் நடந்தது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா 16ம் தேதி நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து, நேற்று காலை ஐந்திரு மேனிகள் விழா நடந்தது. மாலை 6.30 மணியளவில் இறைவன், இரவலர் கோல விழா நடந்தது.
இந்த நிலையில், பங்குனி பெருவிழாவின் கடைசி நிகழ்வாக, கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருக்கல்யாண வைபவம் இன்று மாலை 7 மணியளவில் நடக்கிறது. முன்னதாக காலை, திருக்கூத்த பெருமான் திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி நடக்கிறது.
மாலை 6 மணிக்கு புன்னை மரத்தடியில், உமாதேவியார், மயில் உருவில் மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சிவன் உமாதேவியாருக்கு காட்சியளிக்கிறார். அதை தொடர்ந்து இரவு 7 மணியளவில் கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
Comments
Post a Comment