India vs Pakistan Asia cup-அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து தமிழக வீரர் கார்த்தி சாதனை - இந்தியா-பாகிஸ்தான் டிரா


India vs Pakistan Asia cup-அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து தமிழக வீரர் கார்த்தி சாதனை - இந்தியா-பாகிஸ்தான் டிரா


இந்தோனேசியாவில் இன்று தொடங்கிய ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்ய ஆட்டம் டிரா ஆனது. முதல் கோலை இந்தியாவுக்காக தன் முதல் சர்வதேசப்போட்டியை ஆடும் தமிழக வீரர்  செல்வம் கார்த்தி  அடித்தார்.

பிற்பாடு ஆட்டம் முடியும் தறுவாயில் இந்திய பாதுகாப்பு அரண் தளர்வடைந்த போது பாகிஸ்தான் அணியின் அப்துல் ரானா கடைசியில் ஒரு கோலை அடிக்க ஆட்டம் சமன் ஆனது. இந்திய அணியின் கோச்சாக சர்தார் சிங்கின் அறிமுகப் போட்டியாகும் இது, இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுமே இளம் வீரர்களால் ஆனது, இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இல்லை, பாகிஸ்தானும் இளம் அணியையே அனுப்பியது.

முதல் 15 நிமிட ஆட்டத்தில் இந்திய அணியிடம் தான் பந்து 61% இருந்தது 39% தான் பாகிஸ்தான் வசம் இருந்தது. முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு பாகிஸ்தானுக்குத்தான் கிடைத்தது ஆனால் ட்ராக் பிளிக்கை எடுத்தவர் எடுக்கும்போதே தவறு செய்ததால் அது கோலாக மாறவில்லை. அங்கேயே அது முடக்கப்பட்டது.

முதல் கால்மணியில் 3ம் நிமிடத்தில் இந்தியாவின் எஸ்.வி.சுனிலை பாகிஸ்தான் வீரர் கீழே தள்ள பெனால்டி கார்னர் இந்தியாவுக்கு கிடைத்தது. ட்ராக் பிளிக்கை எடுத்த நிலம் சஞ்ஜீப் பாகிஸ்தான் கோல் பாருக்கு மேல் அடித்து வீணடித்தார். உடனேயே அடுத்த பெனால்டி கார்னரும் கிடைத்தது, இந்த முறை பந்தை சரியாக வாங்காமல் கோட்டை விட்டது. 6ம் நிமிடத்தில் வலது புறம் நல்ல கிராஸ் செய்யப்பட்டது பாகிஸ்தான் கோல் அருகே இந்தியாவின் 3 ஃபார்வர்ட் வீரர்கள் இருந்தும் ஷாட்டை டச் செய்ய முடியவில்லை.

8-வது நிமிடத்தில் முன்னிலை கொடுத்த தமிழக வீரர் கார்த்தி :

அதன் பிறகு பாகிஸ்தானுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர்கள் விரயம் செய்ய இந்தியாவுக்கு இன்னொரு பெனால்டி கிடைக்க இந்த முறை பாகிஸ்தான் கோல் கீப்பர் அற்புதமாகத் தடுத்தார், ஆனால் ரீபவுண்டில் இன்னொரு வாய்ப்புக் கிடைத்தது இதுதான் தமிழக வீரர் கார்த்தி செல்வத்தின் அறிமுக கோலாக அமைந்தது. ஷாட்டை அடித்தார் கார்த்தி செல்வம் இடையில் பாகிஸ்தான் வீரர் ஸ்டிக்கில் லேசாகப் பட்டு கோலாக ஆனது. அறிமுக சர்வதேசப் போட்டியிலேயே கோல் அடித்து சாதனை புரிந்தார் தமிழக வீரர் கார்த்தி செல்வம்.

இந்த கோலுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆட்டம் கொஞ்சம் சூடுப்பிடித்தது, முதலில் இந்திய கோல் பகுதிக்குள் ஊடுருவ தடுமாறியவர்கள் பிறகு அடிக்கடி ஊடுருவினார்கள், ஆனால் கிடைத்த வாய்ப்பையெல்லாம் கோட்டை விட்டனர், ஒருமுறை ஓபன் கோல் வாய்ப்பே கிடைத்தது, ஆனால் அவசரத்தில் விட்டு விட்டனர்.

2வது கால் மணி ஆட்டத்தில் இந்தியாவின் ஒரு வாய்ப்பை பாகிஸ்தான் கோல் கீப்பர் தடுக்க பாகிஸ்தான் ஷாட்டை இந்திய கோல் கீப்பர் தடுத்தார். 3வது கால்மணி நேர ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏறக்குறைய கோல் அடித்திருக்கும், இந்திய கோல் கீப்பர் சூரஜ் உடன் நேருக்கு நேர் ஒத்தைக்கு ஒத்தை இருந்தார் பாகிஸ்தான் வீரர் ராணா, ஆனால் கோல் அடிக்க முடியாமல் தடுத்தார் சூரஜ். ரீபவுண்ட் வந்த போது அதை அர்பாஸ் கோலுக்கு மேல் அடித்து விரயம் செய்தார்.

3ம் கால் மணி நேர ஆட்டம் வரை இந்தியா 6 பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்ற பாகிஸ்தான் கிட்டத்தட்ட 5 வாய்ப்புகளை விரயம் செய்தது. 3வது கால்மணி ஆட்ட முடிவிலும் இந்தியா 1-0 என்று முன்னிலை வகித்தது. 4வது கால் மணி நேர ஆட்டத்தில் இந்தியாவின் சிம்ரன் ஜித் சிங் அடித்த கோல் நோக்கிய ஷாட்டை பாகிஸ்தான் கோல் கீப்பர் தடுத்தார்.

ஆட்ட முடிய 2 நிமிடங்கள் இருக்கும் வரை இந்தியா 1-0 என்று முன்னிலை வகித்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பாகிஸ்தானுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஷாட்டை கோல் அருகே இருந்த இந்திய வீரர் ஸ்டிக்கால் தடுத்து விட அந்த ரீபவுண்ட் பந்து பாகிஸ்தான் வீரர் ராணாவுக்கு நேராக செல்ல, அருகில்தான்.. அவர் கோலாக மாற்றினார், இது சமன் கோல் ஆனது, 1-1. கோலை சந்தேகப்பட்டு இந்தியா செய்த ரிவியூ வேஸ்ட் ஆனது.

கடைசி வாய்ப்பாக இந்தியாவின் சிம்ரன் ஜித் சிங் அருமையாக பாகிஸ்தான் சர்க்கிளுக்குள் ஊடுருவினார் ஆனால் ஷாட்டை வைடாக அடித்து விட்டார். இந்தியா 1-1 என்று ட்ரா செய்தது. இரு அணிகளுமே கோல் நோக்கிய ஷாட்களை 11 முறை அடித்ததில் தலா ஒருமுறைதான் இரு அணிகளும் கோலாக மாற்றின, அதே போல் எதிரணியின் சர்க்கிளுக்குள் நுழைந்த வகையிலும் இரு அணிகளும் சமமாக 9 முறை ஊடுருவினர். கடைசியில் தமிழக வீரர் அடித்த முதல் சர்வதேச கோல் வெற்றியாக மாறாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

நாளைய போட்டியில் இந்திய அணி வலுவான ஜப்பான் அணியை சந்திக்கின்றது, இன்றைய போட்டியில் ஜப்பான் அணி இந்தோனேசியாவை 9-0 என்ற கோல்கள் கணக்கில் பந்தாடியது.

Comments

Popular posts from this blog